பயங்கரவாதிகள் அதிரடித் தாக்குதல்... சத் நாட்டில் 23 ராணுவ வீரர்கள் பலி... உலக நாடுகள் அதிர்ச்சி!

 

ஆப்பிரிக்க நாடான சத் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் 'போகோ ஹரம்' (Boko Haram) என்ற பயங்கரவாத அமைப்பினர், லேக் சத் பகுதியில் உள்ள ராணுவ நிலையை குறிவைத்துத் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் கொடூரத் தாக்குதலில் 23 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 26 வீரர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ராணுவம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய அதே தருணத்தில், சுதாரித்துக் கொண்ட ராணுவ வீரர்களும் அவர்கள் மீது கடுமையான பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இது குறித்து சத் நாட்டு ஜனாதிபதி மகமத் இத்ரித் டெபி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது கோழைத்தனமான தாக்குதல்" எனப் பயங்கரவாதிகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாகப் போகோ ஹரம் குழுவினர் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதல் மற்றும் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குப் புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளிலும் தாக்குதல் நடத்தி வரும் இந்தப் பயங்கரவாதக் குழுவை ஒடுக்க, சத் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தத் தாக்குதல் சம்பவம் சத் நாட்டில் மட்டுமல்லாது அண்டை நாடுகளிலும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.