காரை ஆற்றில் கவிழ்த்து மனைவியைக் கொலை செய்த ராணுவ வீரர்!  

 

பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் பாஜேவாலா கிராமத்தைச் சேர்ந்த ஹேப்பி சிங் என்ற ராணுவ வீரர், ரமந்தீப் கவுர் வயது 30 என்ற பெண்ணை கடந்த 2024-ஆம் ஆண்டு    காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தினர் அந்தப் பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொள்ள மறுத்ததால், கணவன் மனைவி இடையே தொடர்ந்து கடுமையான குடும்பத் தகராறுகளும்   மனக்கசப்புகளும் ஏற்பட்டு வந்தன. இதனால் சொந்த ஊரை விட்டு வெளியேறிய இந்த தம்பதியினர், சங்கரூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இந்நிலையில் மனைவியுடன் வாழப் பிடிக்காத ஹேப்பி சிங், அவளைத் தீர்த்துக்கட்ட சதியைத் திட்டமிட்டுள்ளார். அதன்படி ரமந்தீப் கவுரைப் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள பசியானா பாலத்திற்கு காரில் அழைத்துச் சென்று, அங்கிருந்த பக்ரா கால்வாய் ஆற்று நீரில் காரை வேண்டுமென்றே   கவிழ்த்துள்ளார். இதில் அந்தப் பெண் காரினுள்ளே பூட்டப்பட்டு நீருக்குள் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஹேப்பி சிங் மட்டும் கார் விழுந்த வேகத்தில் நீச்சலடித்துத் தப்பி உயிர் பிழைத்ததாகப் போலிசாரிடம் நாடகமாடியுள்ளார்.

ஆனால் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் அளித்த அவசரப் புகாரின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலிசார் காரை ஆற்றில் இருந்து மீட்டுத் தீவிர  ஆய்வு நடத்தினர். அப்போது ஓட்டுநர் இருக்கைக் கதவு மட்டும் முன்கூட்டியே திட்டமிட்டுத் திறக்கப்பட்டிருந்த   ஆதாரம் சிக்கியதால், ஹேப்பி சிங்கின் கொலைச் சதி வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து ராணுவ வீரர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலிசார் அவரை   கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.