லட்சக்கணக்கில் லஞ்சம்... இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது!

 

கோயில் புதுப்பிக்கும் பணிக்கான ஒப்பந்ததாரரிடம் ₹1 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில், இந்து சமய அறநிலையத்துறையின் உயர் அதிகாரியான இணை ஆணையர் ஜோதிலட்சுமியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கிய இவருக்குத் தொடர்ந்து பதவி உயர்வுகள் வழங்கப்பட்ட பின்னணியில், தற்போதைய தவெக அரசின் இந்த ஊழல் தடுப்பு நடவடிக்கை ஆன்மீக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த தீபாம்பாள்புரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு வள்ளியம்மைநாதர் திருக்கோயில் புதுப்பிக்கும் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தத் திருப்பணிகளை மேற்கொண்டு வரும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் ஒப்பந்ததாரரிடம், பணிகளுக்கான அடுத்தகட்ட நிதி ஒப்புதல் மற்றும் சான்றிதழ்களை வழங்க இணை ஆணையர் ஜோதிலட்சுமி லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் ரகசியப் புகார் அளித்தார். அதிகாரிகளின் ஆலோசனையின்படி, நேற்று இரசாயனம் தடவிய ₹1 லட்சம் ரொக்கப் பணத்தை ஒப்பந்ததாரர் ஜோதிலட்சுமியிடம் வழங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரைப் பணத்துடன் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஜோதிலட்சுமி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அறநிலையத்துறையின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையில் உதவி ஆணையராகப் பணியில் சேர்ந்தார். திருவண்ணாமலை மாவட்டக் கோயில்களின் உதவி ஆணையராகவும், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிசுவாமி கோயிலின் துணை ஆணையராகவும் மற்றும் செயல் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி கோயில் மற்றும் தஞ்சாவூர், திருவண்ணாமலை போன்ற பல முக்கியப் பகுதிகளின் திருக்கோயில்களில் அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார்.

கடந்த 2024 பிப்ரவரி மாதம் வெளியான இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின்படி, உதவி ஆணையராக இருந்த இவர் துணை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். அதன் தொடர்ச்சியாக மிகக் குறுகிய காலத்திலேயே இணை ஆணையராகவும் பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணை ஆணையர் ஜோதிலட்சுமி மீது ஏற்கனவே பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடு புகார்கள் நிலுவையில் இருந்த விபரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு அறிவித்த நேரத்தில், தமக்குக் கீழ் இருந்த கோயில் உண்டியல் பணமான சுமார் ₹10 லட்சம் வரையிலான பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் முறைப்படி மாற்றாமல் காலக்கெடுவை வீணடித்து, அரசுப் பணத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக இவர் மீது முதல் முக்கியப் புகார் எழுந்தது.

தங்கம் மற்றும் வைர நகைகளைப் பக்தர் ஒருவர் கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கியபோது, அந்த நகைகளை முறையான கோயில் பதிவேட்டில் ஏற்றாமல் சொந்தப் பயன்பாட்டிற்கு அபகரித்துக் கொண்டதாகக் கடுமையான குற்றச்சாட்டு உள்ளது.

வைகுண்ட ஏகாதசி நன்னாளில் சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்திற்கான பிரத்யேக விஐபி டிக்கெட்டுகளை விற்றதில், சுமார் ₹4 லட்சம் வரையிலான அரசுப் பணத்தைக் கணக்கில் காட்டாமல் ஏமாற்றியதாகப் புகார் உள்ளது.

இத்தனை கடுமையான குற்றச்சாட்டுகள் ஜோதிலட்சுமி மீது இருந்ததன் காரணமாக, துறை ரீதியாக அவர் மீது '17 பி' (17-B Charge Memo) பிரிவின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைகள் பாய்ந்திருந்தன. இருப்பினும், முந்தைய ஆட்சியாளர்களின் மறைமுக ஆதரவோடு இவருக்குத் தொடர்ந்து முக்கியக் கோயில்களில் உயர் பதவி உயர்வுகளும், இலாபகரமான இடமாறுதல்களும் தடையின்றி வழங்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது லஞ்ச வழக்கில் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ள இணை ஆணையர் ஜோதிலட்சுமியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னை மற்றும் தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லங்களிலும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தல் கோணத்தில் சோதனைகள் நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.