கனமழையால் சுரங்கத்திற்குள் வெள்ளம் புகுந்து 7 தொழிலாளர்கள் பலி, 14 பேர் படுகாயம்!
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் பிபல்கோட்டில் டிஎச்டிசி சுரங்கப்பாதைக்குள் வெள்ளநீர் மற்றும் கற்கள் புகுந்த விபத்தில் ஏழு தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும் பதினான்கு பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
சமோலி மாவட்டத்தின் பிப்பல்கோட்டி பகுதியில் நீர்மின் திட்டத்திற்காக சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக அப்பகுதியில் ஏற்பட்ட கசிவு காரணமாக சுரங்கத்திற்குள் அதிவேகமாக தண்ணீர் மற்றும் மண், கற்கள் அடித்துச் செல்லப்பட்டன. அப்போது உள்ளே பணியில் இருந்த தொழிலாளர்கள் நீரோட்டத்தின் வேகத்தால் சுரங்கத்தினுள் வேகமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர்.
இது பற்றிய தகவல் தெரிந்ததுமே உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கிய நிலையில் பதினெட்டு தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரம் ஏழு பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்திற்குள் புகுந்த மண் மற்றும் இடிபாடுகளை அகற்றி சிக்கியுள்ள மேலும் சிலரை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாகச் ஈடுபட்டு வருகின்றனர்.