பைக்கில் வந்த அமைச்சர் ஆனந்த்... கூவம் ஆற்றில் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்தார்!
சென்னையில் வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையை முன்னெச்சரிக்கையாக எதிர்கொள்ளும் வகையில், கூவம் ஆற்றில் தூர்வாரும் பணிகளைத் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் இன்று நேரில் சென்று தொடங்கி வைத்தார்.
கூவம் ஆற்றின் நீரோட்டத்தைத் தடை செய்யும் வகையில் தேங்கியுள்ள கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மண் படிவங்களை இயந்திரங்கள் மூலம் அகற்றி நீரோட்டத்தைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் உபரி நீர் தேங்காமல், கூவம் ஆற்றின் வழியே கடலை நோக்கி நீர் சீராகச் செல்வதை உறுதி செய்து, வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதே இந்தப் பணிகளின் முதன்மை நோக்கமாகும்.
தூர்வாரும் பணிகளைப் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே தரமாகவும் விரைவாகவும் முடித்து, ஆற்றின் நீர் கடத்தும் திறனை அதிகரிக்க வேண்டும் எனப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கூவம் ஆற்றைச் சீரமைத்து வெள்ளப் அபாயத்தைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த தூர்வாரும் பணிகள் சென்னைவாசிகளுக்குப் பெரும் ஆறுதலை அளித்துள்ளன.