பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை!
திமுகவினர் போராட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் எச்சரித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், "நாளை முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது தெரிந்திருந்தும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஏன் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளைப் பேச வேண்டும்? சட்டமன்றத்தில் பங்கேற்கக் கூடாது என்ற திட்டமிட்ட நோக்கிலேயே அவர் இவ்வாறு பேசினாரோ என்ற சந்தேகம் எழுகிறது" எனக் குறிப்பிட்டார்.
"எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவர்களைப் பற்றித் தவறாகப் பேசுவது குற்றமே. சட்டமன்றத்திற்கு வரக்கூடாது என நினைத்து உதயநிதி அவ்வாறு பேசியிருக்கலாம். ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் த.வெ.க அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது" எனக் காட்டமாகக் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து நெல்லையில் திமுகவினர் நடத்திய சாலை மறியலின் போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் தெரிவித்தார்.
"அரசியலை அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும். போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதையோ அல்லது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதையோ த.வெ.க அரசு அனுமதிக்காது; மீறிச் செயல்படுபவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் திட்டவட்டமாக எச்சரித்தார்.