மாணவர்களின் சாதி சான்றிதழ் இல்லாத அடையாள அட்டை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதிய விளக்கம்!

 

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள ஸ்மார்ட் அடையாள அட்டைகளில் சாதி விவரங்கள் இடம்பெறுவது குறித்து எழுந்துள்ள விவாதங்களுக்கு மத்தியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தற்போது புதிய விளக்கமளித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், மாணவர்களுக்குச் சாதி சான்றிதழ் விவரங்கள் இல்லாத 'டேட்டா அடையாள அட்டை' வழங்குவது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், "பள்ளி மாணவர்கள் மதம் மற்றும் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே இந்தத் திட்டம் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டை வழங்கும் பணியில் பள்ளிக்கல்வித்துறையும் வருவாய்த்துறையும் இணைந்து செயல்படும்."

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிப் பெயர் இடம்பெறும்" என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். முந்தைய அறிவிப்புக்குப் பரவலான விவாதங்கள் எழுந்த நிலையில், தற்பொழுது வருவாய்த்துறையுடன் இணைந்து சாதி விவரங்கள் இல்லாத அடையாள அட்டையை வழங்குவது குறித்து அரசு பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.