அமைச்சர் கீர்த்தனாவின் சாதிப் பெருமைப் பேச்சு... வலுக்கும் கண்டனங்கள்!

 

பள்ளி விழாவொன்றில் தவெக அமைச்சர் கீர்த்தனா சாதிப் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும் கண்டனங்களையும் கிளப்பியுள்ளது.

சர்ச்சைக்குரிய பேச்சு:பள்ளி நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, "சத்திரியர் என்று சொல்வதற்கும், இந்தப் பள்ளியில் படித்ததற்கும் பெருமையாக இருக்கிறது" எனக் கூறி நெஞ்சில் கை வைத்துப் பேசியதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பெரியார் மற்றும் அம்பேத்கரை முதன்மைச் சமூக நீதிப் பாதைக் வழிகாட்டிகளாகக் கொண்டு இயங்குவதாகக் கூறிக்கொள்ளும் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த அமைச்சரே, பள்ளி மாணவர்கள் முன்னிலையில் சாதிப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பேசியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகச் சமூக ஆர்வலர்களும் நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நீலம் பண்பாட்டு மையம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் வலைத்தளச் செயல்பாட்டாளர்கள், பொதுவாழ்வில் உள்ள தலைவர்கள் பள்ளி மேடைகளில் பேசும்போது கூடுதல் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளையில், அமைச்சர் குறிப்பிட்ட பள்ளியின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசும்போது அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும், அவரது பேச்சைத் திட்டமிட்டு அரசியலாக்க வேண்டாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த விவகாரம் குறித்துத் தவெக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.