மின்வாரியத்தில் 10-க்கும் மேற்பட்ட Hard Disk-க்குகள் திருட்டு - அமைச்சர் நிர்மல்குமார் விசாரணை!

 

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமையகத்தில், மிக முக்கிய டெண்டர்கள் மற்றும் கொள்முதல் விபரங்கள் அடங்கிய 10-க்கும் மேற்பட்ட கணினி ஹார்டு டிஸ்க்குகள் மர்மமான முறையில் திருடப்பட்டுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்சிக் காலங்கள் மற்றும் சமீபத்திய கொள்முதல் நடவடிக்கைகளில் மின்வாரியத்தில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், துறை ரீதியான உயர்மட்ட விசாரணைக்கு அமைச்சர் நிர்மல்குமார் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இந்தத் தணிக்கை மற்றும் விசாரணைப் பணிகள் தீவிரமடைந்திருந்த சூழலில், மின்வாரியத் தலைமையகத்தின் முக்கியப் பிரிவில் இருந்த கணினிகளிலிருந்து ஹார்டு டிஸ்க்குகள் திடீரென மாயமாகியுள்ளன.

காணாமல் போன இந்த ஹார்டு டிஸ்க்குகளில், கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மின்சாரக் கொள்முதல், நிலக்கரி இறக்குமதி மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட டெண்டர்களின் மிக முக்கிய ரகசியத் தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்துத் தற்போது செய்தி ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் என எச்சரித்துள்ளார். "மின்வாரியத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணையை நாங்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய உடனேயே, அதற்குரிய டிஜிட்டல் ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் இந்த ஹார்டு டிஸ்க்குகள் திட்டமிட்டுத் திருடப்பட்டுள்ளன.

இது உள்ளே இருக்கும் சிலரின் கூட்டுச் சதியின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, சம்பந்தப்பட்ட பிரிவில் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசுத் தரவுகளைத் திருடி, முறைகேடுகளை மறைக்க முயன்றவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது" என்று அமைச்சர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.