குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது 'சாரல் திருவிழா' - அமைச்சர் ராஜீவ் தொடங்கி வைத்தார்!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் புகழ்பெற்ற 'சாரல் திருவிழா 2026' இன்று கோலாகலமாகத் தொடங்கியது. கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவில் அமைச்சர் ராஜீவ் விழாவைத் தொடங்கி வைத்தார். இன்று ஜூலை 31-ம் தேதி தொடங்கியுள்ள இச்சாரல் திருவிழா வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் விழாத் தொடக்கம் பெற்றது.
விழாவையொட்டி மலர்க் கண்காட்சி, படகுப் போட்டி, நாய்கள் கண்காட்சி, கொழு கொழு குழந்தைகள் போட்டி, யோகா மற்றும் ஆணழகன் போட்டிகள் எனப் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருவிழாவின் தொடக்க நாளான இன்று பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளுடன், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் மற்றும் கிராமியப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து வரும் நாட்களில் நாள்தோறும் மாலை நேரத்தில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் மெல்லிசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, தோல்பாவைக் கூத்து மற்றும் திருநங்கைகளின் சிறப்புப் பல்சுவை நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நடத்தப்பட உள்ளன.