“பேச்சில் வன்கொடுமை, செயலில் வன்முறை” - திமுகவினருக்கு அமைச்சர் ராஜ்மோகன் கடும் கண்டனம்!

 

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்துச் சாலையில் போராட்டம் நடத்திய திமுகவினர், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்குத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவிரி விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, தொண்டர்கள் நடிகை த்ரிஷாவின் பெயரைக் கூறி கோஷமிட்டனர். அதற்கு உதயநிதி இரட்டை அர்த்தத்தில் அளித்த பதில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீலாங்கரை இல்லத்தில் வச்சுக் கைது செய்யப்பட்டார்.

உதயநிதி கைதைக் கண்டித்து திமுகவினர் நடத்திய சாலை மறியலின் போது, மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியைத் திமுகவினர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தைக் கண்டித்துப் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், "அடுத்தடுத்து பெண்களைத் தரக்குறைவாகப் பேசி வந்த திமுகவினர், தற்போது வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர். பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் காட்டுவது மிகவும் மோசமானது" எனக் குறிப்பிட்டார்.

"இவர்களின் அச்சுறுத்தல் காரணமாகப் பொதுமக்கள், பெண்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். சமூக ஒழுங்கைச் சீர்குலைத்துப் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும்" என எச்சரித்தார்.