பெயர் விவகாரத்தில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்!

 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் விவகாரம் மற்றும் சாதிப் பெயரை அடிப்படையாகக் கொண்ட விமர்சனங்கள், தற்பொழுது ஆளும் தவெக அமைச்சருக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போராக வெடித்துள்ளது.

திமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் தவெக அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் வேளையில், இந்தத் புதிய மோதல் தூத்துக்குடி மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்ற ஆய்வு மற்றும் சில ஒழுங்கு நடவடிக்கைகளின் போது, அங்கிருந்த அர்ச்சகர் ஒருவரைத் தமிழகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவமதித்துவிட்டதாகக் கூறி, திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில், அமைச்சர் ரமேஷின் பெயரைத் திட்டமிட்டு மாற்றி, 'ரமேஷ் ஐயங்கார்' என்று குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சித்திருந்தார். ஒரு அமைச்சரின் சாதிப் பின்னணியை பொதுவெளியில் முன்னிறுத்தி விமர்சித்தது தவெக தரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனிதா ராதாகிருஷ்ணனின் இந்தச் சாதியக் குறியீட்டு விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளம் வாயிலாகக் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள், பக்தர்களை ஏமாற்றுபவர்கள் மற்றும் மக்களைச் சுரண்டிப் பிழைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சாதி, மத பாகுபாடு இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத்தான் இந்தத் தமிழக மக்கள் எங்களை வாக்குகளளித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம். மக்களின் நலனுக்காகச் செய்யப்படும் நேர்மையான நடவடிக்கைகளுக்குச் சாதிச் சாயம் பூச நினைக்கும் இத்தகைய மலிவான அரசியல் நகர்வுகள் எங்களிடம் பலிக்காது" என்று கூறியுள்ளார்.