நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த அமைச்சர் வன்னி அரசு - "நிறைய மக்களுக்கு செய்யுங்கள்" என வாழ்த்து!
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, தமிழக சமூகநீதித் துறை அமைச்சரும் விசிக துணைப் பொதுச்செயலாளருமான வன்னி அரசு இன்று போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
அமைச்சர் வன்னி அரசு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், "சமூகநீதித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன்; அதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, "நிறைய மக்களுக்குச் செய்யுங்கள்... எனது மனமார்ந்த வாழ்த்துகள்!" என ரஜினிகாந்த் தம்மை வாழ்த்தி அனுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகியும் அமைச்சருமான வன்னி அரசு, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.