மழைக்காலத்தில் பிளெக்ஸ், பேனர்கள் வைக்கத் தடை - அமைச்சர் விஜய் பாலாஜி உத்தரவு!

 

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

பருவமழை காலங்களில் பிளெக்ஸ் மற்றும் பேனர்களால் பொதுமக்களுக்குப் பல்வேறு கடுமையான இடையூறுகளும் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்தப் பகுதியிலும், யார் பெயரிலும் பேனர்கள் இருக்கக் கூடாது என்று அமைச்சர் கண்டிப்புடன் தெரிவித்தார். மாநகராட்சிப் பகுதியில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மழைநீர் வடிகால்களில் குப்பைகளைக் கொட்டுபவர்களைக் கண்காணிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு ஒருமுறைக்குப் பலமுறை எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாமன்ற உறுப்பினர்கள் பொதுநலன் கருதி கூறும் பணிகளை அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கக் கூடாது என்றும், அவர்களின் வார்டு நிதி தொடர்பான பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.