நெகிழ்ச்சி ... அமைச்சர் தந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை!
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பி. மத்தன் ராஜாவின் தந்தை பி. பெருமாள், நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு திடீரென வயது முதிர்வு சார்ந்த உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் மத்தன் ராஜா எவ்வித ஆடம்பரமும் இன்றி, தனது தந்தையைச் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் (GH) அவசரமாக அனுமதித்தார். அங்கு அவருக்கு ஆரம்பக்கட்ட அவசரச் சிகிச்சைகள் உடனடியாக அளிக்கப்பட்டன.
அதன் பின்னர், அங்கிருந்த மருத்துவர்களின் மேலான ஆலோசனையின்படி, நேற்று வியாழக்கிழமை அதிகாலை பெருமாள் மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (நெல்லை ஜிஹெச்) மாற்றப்பட்டார். அங்குள்ள அதிநவீன உயர் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைத்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரேவதி பாலன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களது மருத்துவத் தேவைகளுக்குத் தனியார் மருத்துவமனைகளை நாடாமல், அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தி மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை அப்படியே பாலோ செய்யும் வகையில் , அமைச்சர் மத்தன் ராஜா தனது தந்தையை அரசு மருத்துவமனையில் அனுமதித்தது மட்டுமின்றி, நள்ளிரவு முழுவதும் தூங்காமல் மருத்துவமனையிலேயே தங்கித் தந்தையின் அருகில் இருந்து கவனித்துக் கொண்ட நெகிழ்ச்சியான விவகாரம், தற்போது சோசியல் மீடியாவில் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று வருகிறது!