"அமைச்சர்கள் ரீல்ஸ் வெறியில் சுற்றுகிறார்கள்.. அனைத்து குற்றங்களிலும் ஆளுங்கட்சியினர் ஈடுபடுகின்றனர்" - புள்ளிவிவரங்களுடன் விமர்சித்த உதயநிதி!

 

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம்சாட்டிப் புதிய தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மாநிலத்தில்  அரங்கேறும் பெரும்பான்மையான குற்றப் பின்னணிகளில் ஆளுங்கட்சியினரே நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர் பரபரப்புக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.

புதிய அரசு பொறுப்பேற்ற இந்த ஒரு மாத காலத்திற்குள் மாநிலம் முழுவதும் நடந்துள்ள குற்றச் சம்பவங்கள் குறித்துப் பல்வேறு அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்களை உதயநிதி ஸ்டாலின் பட்டியலிட்டார். தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திற்குள் மட்டும் தமிழகத்தில் 175 பாலியல் குற்றங்களும், 65 கொலைகளும் அரங்கேறியுள்ளன.

சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்குச் சான்றாக மாநிலத்தில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மாநிலத்தில் நடக்கும் அத்தனை தாதாத்தனம் மற்றும் குற்றச் செயல்களுக்குப் பின்னால் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே ஆணிவேராக இருக்கிறார்கள் என்று அவர் சாடினார்.

அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் பிரச்சினைகளை அரசு கண்டுகொள்ளவில்லை என்று சாடினார். "மக்களுக்கான பாதுகாப்புப் பணிகளையும், துறை சார்ந்த கோப்புகளையும் கவனிக்க வேண்டிய அமைச்சர்கள் அனைவரும் தற்பொழுது சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' போடும் வெறியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொருபுறம், முதலமைச்சர் விஜய் இன்னும் தேர்தல் பிரசாரப் பாணியிலேயே மேடைகளில் பேசி வருகிறாரே தவிர, ஒரு முதலமைச்சருக்கான பொறுப்புடன் கோட்டையிலிருந்து நிர்வாகத்தைக் கவனிக்கவில்லை."

திருவாரூர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் தவெக ஒன்றிய செயலாளர் ஆனந்த் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவைக்கு வெளியே உதயநிதி ஸ்டாலின் "அனைத்து குற்றங்களிலும் ஆளுங்கட்சியினரே ஈடுபடுகின்றனர்" என்று புள்ளிவிவரங்களுடன் பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.