அரசுப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சரின் அண்ணன் - 'ரீல்ஸ்' வெளியிட்டு சர்ச்சை!
புதுக்கோட்டையில் அரசு நலத்திட்ட முகாமில், அமைச்சரின் சகோதரர் நேரடியாகப் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டதோடு, அதனை வீடியோவாக எடுத்துச் சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' ஆகப் பதிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்காக அரசு சார்பில் சிறப்பு நலத்திட்ட முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது: இந்த அரசு முகாமிற்குச் சட்டப்பேரவை உறுப்பினரும் அமைச்சருமான பர்வேஸின் மூத்த சகோதரர் முகமது இப்ராஹிம் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அவர் அங்கிருந்த அரசு அதிகாரிகளிடம் குறைகளைக் கேட்டறிவதும் முகாமினை ஆய்வு செய்வதும் போன்ற காட்சிகளை, உடன் வந்த கட்சி நிர்வாகிகள் தங்கள் மொபைல் போன்களில் படம் பிடித்துள்ளனர். ஆய்வு செய்த காட்சிகளைப் பின்புல இசையுடன் (Background Music) எடிட் செய்து, சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோவாக கட்சி நிர்வாகிகள் பதிவிட்டனர்:
இந்த வீடியோ குறுகிய காலத்தில் இணையத்தில் வைரலாகி, பொதுமக்களின் கவனத்தையும் எதிர்க்கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்தது. அரசு நிர்வாகம் மற்றும் நலத்திட்டச் செயல்பாடுகளில் எவ்வித அதிகாரப்பூர்வப் பொறுப்பிலும் இல்லாத கட்சி நிர்வாகிகளோ அல்லது அமைச்சரின் குடும்பத்தினரோ தலையிடக் கூடாது எனத் தமிழக அரசு ஏற்கனவே கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில், அமைச்சரின் சகோதரர் அரசு நலத்திட்ட முகாமில் அதிகாரம் செலுத்தியதாகக் கூறிப் பல்வேறு தரப்பினரும் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.