இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம் - மத்திய வெளியுறவு அமைச்சகம் அவசர அறிவுறுத்தல்!
ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் வான்வெளி பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக, இந்தியக் குடிமக்கள் யாரும் ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ள போதிலும், வான்வெளி கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை.
பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலால் வான்வழிப் பாதையில் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே, மறு உத்தரவு வரும் வரை ஈரானுக்குச் சுற்றுலா அல்லது வேலை நிமித்தமாகச் செல்வதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஏற்கனவே அங்கிருப்பவர்களுக்கு: தற்போது ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள், தங்களைப் பற்றிய விவரங்களை அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக, இந்திய வான்பரப்பிலும் பாகிஸ்தான் விமானங்களுக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச அளவில் நிலவும் இந்த பதற்றம் இந்தியப் பயணிகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
ஈரான் அல்லது இஸ்ரேல் போன்ற நாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த இந்தியர்கள், தங்களது பயணத் திட்டங்களை ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ அறிவுறுத்தப்படுகிறார்கள்.