வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதலால் பதற்றம்!

 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே மீண்டும் நேரடிப் போர் மூண்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி வர்த்தகப் பாதையான ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அண்டை வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவப் படைத்தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன் விமானங்களைக் கொண்டு தீவிரத் தாக்குதல்களை நடத்தியுள்ளதால், மத்திய கிழக்கில்  போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சூன் 17-ஆம் தேதி ஒரு தற்காலிகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, இருதரப்புப் போரைக் கட்டுப்படுத்தவும், ஹர்முஸ் ஜலசந்தி வழியாகச் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தைச் சீரமைக்கவும் 60 நாட்களுக்குப் போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமன் கடற்கரையை ஒட்டிய தெற்குப் பாதையில் பயணித்த மூன்று வணிகச் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. தங்களது அனுமதியின்றி மாற்றுப் பாதையில் சென்றதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கப்பல் ஒன்றில் 11 இந்திய மாலுமிகளும் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் முறிவடைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஒப்பந்த முறிவை அடுத்து, அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் ஈரானின் முக்கியப் பகுதிகள் மீது அடுக்கடுக்கான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுக நகரம், சிரிக் கடலோரப் பகுதி மற்றும் புஷெர் மாகாணத்தில் உள்ள முக்கிய ராணுவ இலக்குகள், ஏவுகணை ஏவுதளங்கள், ட்ரோன் உற்பத்தி மையங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து அமெரிக்கா ஏவுகணைகளை வீசித் தாக்கியது.

அமெரிக்காவின் இந்தத் தீவிரத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் குறிவைத்துத் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஜோர்டன், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அண்டை அரபு நாடுகளில் இயங்கி வரும் அமெரிக்க ராணுவப் படைத்தளங்களை நோக்கி ஈரான் தங்களது ஏவுகணைகளையும் ஆயுதம் தாங்கிய ட்ரோன்களையும் ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் 5-ஆவது கடற்படைத் தலைமையகப் பகுதியில் இந்தத் தாக்குதல்களின் போது இரண்டு முறை ஆபத்து எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டன. குவைத் ராணுவம் தங்களை நோக்கி வந்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வான்வழியிலேயே இடைமறித்து அழித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேசக் கடல் வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹர்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடுவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை அறிவித்துள்ளது. இந்த ஜலசந்தி வழியாகவே உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் மூன்றில் ஒரு பங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளதுடன், சர்வதேசப் பங்குச் சந்தைகளும் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இருப்பினும், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் இந்த அறிவிப்பை மறுத்துள்ளதுடன், "ஹர்முஸ் ஜலசந்தி ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை, அது ஒரு சர்வதேச நீர்வழிப் பாதை. கப்பல் போக்குவரத்து தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றும் மாற்றுத் தெற்குப் பாதை வழியாகக் கப்பல்கள் இயக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும், இரு நாடுகளும் தங்களது தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை எனத் தீவிரமாக முழங்கி வருவதால், மத்திய கிழக்கில் எந்நேரமும் முழு அளவிலான போர் வெடிக்கலாம் என்ற அச்சமும் பதற்றமும் உலக நாடுகள் இடையே நீடித்து வருகிறது.