ஈரான் பயணிகள் விமானம் மீது ஏவுகணைத் தாக்குதல்... பதற வைக்கும் வீடியோ வெளியீடு!
ஈரானின் தெற்குத் துறைமுக நகரமான புஷேர் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈரான் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் பயணிகள் விமானம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் புதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா அல்லது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப் படைகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலில், ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் சில நொடிகளில் தீப்பிடித்துப் பலத்த சேதமடையும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல்களின்போது புஷேர் விமான நிலையத்தில் நிகழ்ந்த தாக்குதல் குறித்த வெளியிடப்படாத சிசிடிவி காட்சிகள் தற்போது சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
அந்த வீடியோ பதிவில், புஷேர் விமான நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈரான் ஏர் நிறுவனத்தின் ஏர்பஸ் பயணிகள் விமானத்தை ஏவுகணை ஒன்று நேரடியாகத் தாக்குவது தெளிவாகத் தெரிகிறது. தாக்குதல் நடந்த அடுத்த நொடியே விமானம் பயங்கரச் சத்தத்துடன் தீப்பிடித்துக் கரும்புகை சூழ்வதும், விமானத்தின் பாகங்கள் சிதறிப் பலத்த சேதமடைவதும் அந்தப் பதறவைக்கும் காட்சிகளில் பதிவாகியுள்ளது.
முன்னதாக, ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின்போதே இந்தப் பயணிகள் விமானம் அழிக்கப்பட்டதாக ஈரான் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இந்தத் தாக்குதலை அமெரிக்கப் படைகள் தனியாக நடத்தினவா அல்லது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து நடத்தினவா என்பது குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாரசீக வளைகுடா கடற்கரையில் அமைந்துள்ள புஷேர் நகரம், ஈரானின் அணுமின் நிலையம் அமைந்துள்ள முக்கியப் பகுதி என்பதால், அங்குள்ள விமான நிலையத்தின் மீதான இந்தத் தாக்குதல் காட்சிகள் சர்வதேச அளவில் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.