ஹார்மூஸ் ஜலசந்தியில் குவைத் கொடி கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் - 5 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு!

 

பாரசீக வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற குவைத் நாட்டுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நடுக்கடலில் தவித்த 5 இந்திய மாலுமிகள் ஓமன் அரசின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலக நாடுகளின் வர்த்தகத்திற்குமிக முக்கியப் பகுதியான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மூடியது. இதனால் இப்பகுதியில் செல்லும் கப்பல்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் சந்தித்து வருகின்றன.

குவைத் கொடியுடன் கச்சா எண்ணெயைச் சுமந்துகொண்டு டோகோ நாட்டின் லோமி துறைமுகம் நோக்கிச் சென்ற 'எம்.டி. கஜீமா 3' என்ற கப்பல் ஹார்மூஸ் ஜலசந்திப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், அது பலத்த சேதமடைந்ததுடன் தீப்பிடிக்கும் அபாயமும் ஏற்பட்டது. கப்பல் தாக்கப்பட்டது குறித்த தகவல் அறிந்ததும் ஓமன் நாட்டு மீட்புப் படையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

விபத்துக்குள்ளான அந்தக் கப்பலில் சிக்கித் தவித்த 5 இந்திய பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஓமன் அரசு வழங்கிய இந்த உடனடி உதவிக்கு இந்தியத் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ நன்றியைத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், பாரசீக வளைகுடா பகுதியில் இந்தியக் கொடியுடனான 6 கப்பல்களும், வெளிநாட்டுக் கொடியுடனான 6 கப்பல்களும் என மொத்தம் 12 வர்த்தகக் கப்பல்கள் சரக்குகளுடன் இயங்கி வருவதாகவும், இவற்றில் 163 இந்தியர்கள் உட்பட மொத்தம் 4,500-க்கும் மேற்பட்ட இந்திய பணியாளர்கள் இப்பகுதியில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.