உக்ரைனில் இருந்து புறப்பட்ட கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் - 4 இந்திய மாலுமிகள் பலி; ஒருவர் கவலைக்கிடம்.. மத்திய அரசு கடும் கண்டனம்!

 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் போரின் விளைவாக, கருங்கடல் பகுதியில் வீசிய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் கொடூரமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மற்றொரு இந்திய மாலுமி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசாவ் நாட்டின் கொடியுடன் இயங்கி வந்த சரக்குக் கப்பல் ஒன்று, உக்ரைனின் முக்கியத் துறைமுக நகரமான ஒடேசாவில் இருந்து உணவு தானியங்களை ஏற்றிச் சென்றது. உணவு தானியப் பொருட்களுடன் புறப்பட்ட இந்தக் கப்பலில் மொத்தம் 17 மாலுமிகள் பணியாற்றினர். மாலுமிகள் குழுவில் 5 பேர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் .

ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அந்தச் சரக்குக் கப்பலை இலக்கு வைத்து அதிநவீன ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏவுகணை நேராகக் கப்பலின் மீது மோதி வெடித்ததில், கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு இந்திய மாலுமி மீட்கப்பட்டு, அவசர மருத்துவச் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களுக்கான உணவு தானியங்களை ஏற்றிச் சென்ற வர்த்தகச் சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத் துறை மற்றும் மத்திய அரசு பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சர்வதேசக் கடல் எல்லைகளில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் அப்பாவி மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த 4 இந்திய மாலுமிகளின் உடல்களை உடனடியாக தாயகம் கொண்டு வரவும், படுகாயமடைந்துள்ள மாலுமிக்கு உயர்தரச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் உக்ரைன் மற்றும் தொடர்புடைய நாட்டு அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.