மாயமான 6 வயது சிறுமி சடலமாக மீட்பு; சிசிடிவி வீடியோவால் சிக்கிய சிறுவன்!
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் காணாமல் போன 6 வயது சிறுமி, வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மைனர் சிறுவனைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராம்பூர் மாவட்டம் சஹாபாத் பகுதியில் வசித்து வந்த சிறுமி, கடந்த புதன்கிழமை மதியம் திடீரென மாயமானார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை காலை லக்கி பாக் வனப்பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் சிறுமியை, தனியாக ஆசை வார்த்தைகள் பேசி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றது பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையில், சிறுமியைக் கொன்றதை அந்தச் சிறுவன் ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனினும், இதை உறுதிப்படுத்தும் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்