தமிழக முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

 

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தவெக அரசிற்கு வேண்டுகோளை விடுத்துள்ளார். மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அவர்கள் இயக்கியுள்ள, இலங்கைத் தமிழர்களின் தற்போதைய வாழ்வியல் மற்றும் வலிகளைப் பேசும் "Faceless People" என்ற ஆவணப்படத்தைப் பார்த்த பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தொப்புள்கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த மண்ணிலும், அகதிகளாகப் புலம்பெயர்ந்த இடங்களிலும் சந்தித்து வரும் அன்றாடச் சவால்களையும், அவர்களது வாழ்வியலையும் இந்த ஆவணப்படம் மிகத் துல்லியமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளது என அதன் இயக்குநர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தொப்புள்கொடி உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, முந்தைய தங்களது 'திராவிட மாடல்' அரசு மேற்கொண்ட பல்வேறு உன்னத நலத்திட்டங்களையும், உள்கட்டமைப்பு மேம்பாடுகளையும் அவர் இப்பதிவில் நினைவு கூர்ந்துள்ளார்.

"இலங்கைத் தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அவர்களது முகாம் வீடுகளைச் சீரமைப்பதற்காக முந்தைய திமுக அரசு கொண்டு வந்த சிறப்புத் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளைத் தற்போதைய அரசும் எவ்விதத் தொய்வுமின்றிக் தொடர்ந்து முழுமையாக நிறைவேற்ற வேண்டும்" என மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.