"சீமானுடன் மு.க.ஸ்டாலின் கொஞ்சி குலாவுகிறார்" – திமுக தலைமைக்கு எதிராகத் தொல். திருமாவளவன் கடும் காட்டம்!

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் அண்மையில் வெவ்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பரஸ்பரம் சுமுகமாகப் பேசியுள்ளது, தற்போதைய கூட்டணிக் கட்சியான விசிக தலைவர் தொல். திருமாவளவன் இடையே கடும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைமையின் இந்த திடீர் அரசியல் அணுகுமுறையைக் கடுமையாகச் சாடித் தொல். திருமாவளவன் பேசுகையில், கடந்த காலங்களில் "முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால், அதை நானே நேரில் வந்து உடைப்பேன்" என்று மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் சீமான். அப்படிப்பட்ட ஒருவருடன், தற்போஅரசியல் லாபங்களுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேடைகளில் கொஞ்சி குலாவுகிறார்.

சீமானுக்கும் திமுகவுக்கும் இடையே திரைமறைவில் நெருக்கம் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், அடுத்து வரும் தேர்தல்களில் அவரைப் பொது வேட்பாளராக நிறுத்தக்கூடப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் குறிப்பிட்டார்.

இத்தனை காலமாகக் கொள்கை ரீதியாகவும், தேர்தல் களத்திலும் திமுக கூட்டணியின் வெற்றிக்காகத் தூணாக நின்ற தங்களைப் போன்றவர்களைத் திமுக தலைமை புறந்தள்ள நினைப்பதாகத் தனது வேதனையை வெளிப்படுத்தினார். "அவர்களோடு இணக்கம் காட்டும் திமுகவிற்கு, இப்பொழுது திருமாவளவன் எதிரி ஆகிவிட்டானோ?" என்று ஆதங்கத்துடனும் ஆவேசத்துடனும் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக - விசிக இடையே தொகுதிப் பங்கீடு மற்றும் கொள்கை ரீதியான சில விவாதங்கள் ஏற்கனவே நீடித்து வரும் நிலையில், சீமான் உடனான திமுகவின் இந்த இணக்கமான போக்கு குறித்துத் திருமாவளவன் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்து விவாதித்திருப்பது, தமிழகக் கூட்டணி அரசியலில் ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.