வீட்டில் தீ விபத்தில் எம்.எல்.ஏ தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

 

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபா மாவட்டம் துலியானில் உள்ள சாகர்திகி தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ பைரான் பிஸ்வாஸின் வீட்டில் இன்று காலை எதிர்பாராதவிதமாகத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலத்த தீக்காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பைரான் பிஸ்வாஸின் வீட்டில் திடீரெனப் பற்றிய தீ மளமளவென்று பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ வின் வீட்டின் தரைத்தளத்தில் பீடி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அங்குப் பணியில் இருந்த தொழிலாளர்கள், விபத்து ஏற்பட்டதைக் கண்டதும் உடனடியாக மேல்தளத்திற்கு விரைந்து சென்று தீயில் சிக்கிய எம்.எல்.ஏ பைரான் பிஸ்வாஸைப் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தத் தீ விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.