சிக்கலில் தவெக MLA... தமிழக டிஜிபிக்கு 7 நாட்கள் கெடு.. கள்ளக்குறிச்சி பெண் அதிகாரி விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த தேசிய மகளிர் ஆணையம்!
கள்ளக்குறிச்சி பெண் அரசு அதிகாரி விவகாரம் தொடர்பாகத் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது எழுந்துள்ள புகாரைத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ள ஆணையம், 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
ஊடகச் செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை: கடந்த நவம்பர் 11-ஆம் தேதி ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், பெண் அரசு அதிகாரியிடம் எம்.எல்.ஏ தவறாக நடந்துகொண்டதாகவும், மதுபோதையில் அவரது இல்லத்திற்குச் சென்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஆணையம் தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளது.
தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து எந்தவித அரசியல் அழுத்தமும் இன்றி, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் ஆதாரங்களையும் பாதுகாத்து முறைப்படி ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண் அதிகாரி உயர் அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை அடுத்த 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு தமிழக டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், அரசு அதிகாரிகள் மீது தனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் இருப்பதாகவும், தான் யாருக்கும் எந்தவிதத் தவறான குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.