“எம்.எல்.ஏ. ஆபாச மெசேஜ் அனுப்பியது பாலியல் துன்புறுத்தல்” - நீதிபதி விக்டோரியா கௌரி பரபரப்பு பேச்சு! 

 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பவில்லை என ஆளுங்கட்சித் தரப்பும், கூட்டணிக் கட்சியினரும் கூறி வரும் நிலையில், இது பணியிடத்தில் நிகழும் பாலியல் துன்புறுத்தல் இல்லையா எனச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் மாணவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு பேசினார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ள விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய அவர், அது பணியிடத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக இல்லையா எனக் கேள்வி எழுப்பினார்.

மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் அளித்த போதிலும், இன்று வரை மாநில அரசின் காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகாதா என வெளிப்படையாகப் பேசியது நிகழ்ச்சியில் இருந்தவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் கலந்து கொண்டிருந்த சூழலில், நீதிபதி விக்டோரியா கௌரியின் இந்தக் கருத்து சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பவே இல்லை எனத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் கூறி வந்தனர். மறுபுறம், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், அருள் விக்னேஷ் விவகாரத்தில் அனுதாபப்படும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தரப்பில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வரும் நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே நேரடியாகப் பணியிடப் பாலியல் துன்புறுத்தல் கோணத்தில் கேள்வி எழுப்பியிருப்பது வழக்கில் புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

அரசு உயர் அதிகாரிக்கு எதிராகக் கூறப்படும் ஆபாச குறுஞ்செய்தி விவகாரம், காவல்துறையின் தாமதம் மற்றும் பணியிடப் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் நோக்கம் ஆகியவற்றை மையப்படுத்தி நீதிபதி விக்டோரியா கௌரி முன்வைத்துள்ள இந்தக் கேள்விகள், தற்போது தமிழக அரசியலிலும் நிர்வாக வட்டாரங்களிலும் தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளன.