750 கிலோ போதைப்பொருட்களுடன் பிரபல மாடல் அழகி கைது... மரண தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் உத்தரவு!
எகிப்து நாட்டைச் சேர்ந்த பிரபல செய்தி தொலைக்காட்சி தொகுப்பாளரும், மாடல் அழகியுமான சாரா கலீபா என்பவருக்குப் போதைப்பொருள் வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிநாட்டைச் சேர்ந்த சாரா கலீபா (39) என்பவர், அந்த நாட்டின் பிரபல செய்தித் தொலைக்காட்சி தொகுப்பாளராகப் பணியாற்றி வந்ததோடு, முக்கியமான நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவது மற்றும் விளம்பரங்களில் நடிப்பது, மாடல் அழகியாக வலம் வருவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இதற்கிடையே, எகிப்தில் வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்து கொகைன், ஹெராயின் உள்ளிட்ட கொடிய போதைப்பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதில் சாரா கலீபாவுக்கும் தொடர்பு இருப்பது குறித்துக் காவல்துறையினருக்குத் துப்பு கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சாரா கலீபாவின் வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின்போது அவரது வீட்டில் 750 கிலோ போதைப்பொருட்களும், வீட்டின் அருகே இரண்டு இரகசிய ஆய்வகங்களும் மற்றும் உரிமம் இல்லாத துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சாரா கலீபா உள்பட மொத்தம் 12 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து சாரா கலீபா உள்ளிட்ட 12 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.