நீட் போராட்டத்தில் வைரலான மாடல் அழகி ரியா போலீசில் பரபரப்பு புகார்!
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தின் போது, காவல்துறையின் வேனைத் தனி ஆளாக மறித்து நின்று சமூக வலைத்தளங்களில் வைரலான மாடல் அழகி ரியா ஆஹிர், தற்போது தனக்கு எதிராக நடைபெறும் ஆன்லைன் சித்ரவதைகள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கடந்த ஜூலை 22-ஆம் தேதி மும்பை தாதரில் உள்ள சிவாஜி பூங்காவில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை ஏற்றிச் செல்ல முயன்ற காவல்துறையின் வேனை, மாடல் அழகி ரியா ஆஹிர் தனி ஒருவராக வழியை மறித்து நிறுத்தினார். இச்சம்பவத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாகப் பரவி, அவரது துணிச்சலான செயலுக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. வைரலானதைத் தொடர்ந்து, தன்னை இலக்காக வைத்து திட்டமிட்டபடி அவதூறுகள் பரப்பப்பட்டு வருவதாக ரியா ஆஹிர் குற்றம்சாட்டியுள்ளார்.
நவீன 'டீப்-பேக்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தனது உருவத்தை ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் தவறாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அநாகரிகமான கருத்துகளைப் பதிவிடுவதோடு மட்டுமல்லாமல், தனக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டு வருவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தன்னை ஆன்லைனில் அச்சுறுத்தும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ரியா ஆஹிர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். தனக்கு எதிராகப் பரப்பப்பட்ட போலி டீப்-பேக் வீடியோக்கள், புகைப்படங்கள், ஆபாசப் பின்னூட்டங்கள் மற்றும் அச்சுறுத்தல் பதிவுகளின் டிஜிட்டல் ஆதாரங்களை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவதூறு பரப்பும் நபர்களை அடையாளம் காணும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.