'நவீன நீரோ மன்னன்' ஸ்டாலின் - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!
தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு மற்றும் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைகளைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நவீன நீரோ மன்னன் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்களை முன்வைத்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் திமுக அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
சென்னை திரிசூலம் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம், சந்தோஷ் ஆகிய இருவர் பழிவாங்கும் நோக்கில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 74 வயது முதியவர் கண்ணப்பன் கொல்லப்பட்டதும், அவரது மனைவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும் மனிதநேயமற்ற செயல்.
பல்லடம், ஈரோடு விளாங்காட்டு வலசு எனத் தொடர்ச்சியாகத் தோட்டத்து வீடுகளில் வசிக்கும் முதியவர்கள் இலக்கு வைக்கப்படுவதும், அதில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யாமல் காவல்துறை வழக்கை முடிப்பதும் கண்டிக்கத்தக்கது. கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழர் முகாம் தலைவர் சிவக்குமார் படுகொலை மற்றும் மானாமதுரை பகுதியில் நிகழ்ந்த கொலைகள் தமிழகத்தின் பாதுகாப்பற்ற சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
ரோம் மாநகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுவதை மேற்கோள் காட்டிய அன்புமணி ராமதாஸ், "தமிழகமே கொலை, கொள்ளைகளால் பற்றி எரியும் நிலையில், அதைப் பற்றிக் கவலைப்படாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நவீன நீரோ மன்னன் போலச் செயல்படுகிறார்" என்று விமர்சித்துள்ளார்.
திமுக அரசு சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்றத் தவறிவிட்டதாகவும், தமிழகம் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் இதற்குத் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.