தங்கம் வாங்காதீங்க...  பிரதமர் மோடியின் கோரிக்கையால் நகைத்துறை அதிர்ச்சி... 50 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்!

 

இந்தியப் பொருளாதாரம் சந்தித்து வரும் அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டைச் சமாளிக்க, மக்கள் அடுத்த ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்துள்ள வேண்டுகோள் நகைத்துறையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைக் சுட்டிக்காட்டிய பிரதமர், தேச நலன் கருதி திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகத் தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டுச் சுற்றுலா செல்வதையும் ஒத்திவைக்க வேண்டும் என்று தெலங்கானா பொதுக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமரின் இந்தத் திடீர் அறிவிப்பால், இந்தியாவின் ஜிடிபி (GDP) வளர்ச்சியில் 7 சதவீதம் பங்களிப்பு வழங்கும் நகை மற்றும் ரத்தினத் தொழில் துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்துறையில் சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், விற்பனை வீழ்ச்சியால் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாகத் திருமண சீசன் காலத்தில் நகை விற்பனை 40 சதவீதம் வரை குறையும் என அஞ்சப்படுவதால், சிறு நகை வியாபாரிகள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும், முறையான தங்கம் வாங்குவதைத் தடுப்பது கள்ளச்சந்தை மற்றும் கடத்தல் சம்பவங்களையே அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது 10 கிராம் தங்கம் விலை 1,56,000 ரூபாயைத் தாண்டி நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ள நிலையில், அரசின் இத்தகைய கட்டுப்பாடுகள் மக்களைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்து மீண்டும் ‘வீட்டிலிருந்தே பணி’ (Work From Home) முறையை கடைபிடிக்குமாறும் பிரதமர் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.