இன்று கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ.... அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்... 

 


தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகை தருகிறார். கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றுகிறார். பிரதமரின் வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

இன்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை அவினாசி சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் வாகனப் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக விமான நிலையப் பகுதிக்கு மாலை 4 மணி முதல் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், பயணிகள் முன்கூட்டியே செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பிரதமரின் இந்த வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் சூழலில், மோடியின் இன்றைய உரை தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், கோவை மண்டலத்தில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய பா.ஜ.க.வினர் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.