இன்ஸ்டாகிராமில் சாதனை... 10 கோடி பார்வைகளைக் கடந்து பிரதமர் மோடியின் 'ஜால்முரி' வீடியோ வைரல்!
மேற்கு வங்க மாநிலத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜார்கிராம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது சாலையோரக் கடையில் 'ஜால்முரி' (காரப்பொரி) வாங்கிச் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இந்த வீடியோ பகிரப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இன்ஸ்டாகிராமில் மட்டும் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்து உலக அளவில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி அவர்கள் ஜார்கிராம் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்குப் பிறகு ஹெலிபேட் நோக்கிச் செல்லும் வழியில், விக்ரம் குமார் என்பவரது சிறிய ஜால்முரி கடையில் திடீரெனத் தனது வாகனத்தை நிறுத்தினார். காரில் இருந்து இறங்கிச் சென்ற பிரதமர், ஜால்முரியைச் சுவைத்ததுடன், கடைக்காரருடன் ஜாலியாக உரையாடினார். அப்போது கடைக்காரர் "வெங்காயம் சேர்க்கட்டுமா?" என்று கேட்டதற்கு, "நான் வெங்காயம் சாப்பிடுவேன், ஆனால் யாருடைய மூளையையும் (Brain) சாப்பிடுவதில்லை" என்று நகைச்சுவையாகப் பதிலளித்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இந்த வீடியோவை பிரதமர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ஃபேஸ்புக் பக்கத்திலும் 90 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. இந்த 2026 ஏப்ரல் மாதத்தில் இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களைக் கொண்ட முதல் உலகத் தலைவர் என்ற பெருமையைப் பிரதமர் மோடி பெற்ற நிலையில், தற்போது இந்த வீடியோவும் சாதனை படைத்துள்ளது. பிரதமரின் வருகைக்குப் பிறகு அந்தச் சிறிய கடைக்கு தற்போது மக்கள் கூட்டம் அலைமோதி வருவதால் கடைக்காரர் விக்ரம் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.