பெட்ரோல், டீசலைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்: நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்!
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்துவதில் மிகுந்த கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், எரிபொருள் இறக்குமதியைக் குறைப்பது நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பதற்கும், போர்ச் சூழலால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைப்பதற்கும் இப்போதைய அவசியமானத் தேவை என்று குறிப்பிட்டார்.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கப் பொதுமக்கள் மெட்ரோ இரயில்கள், பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும், கார் பூலிங் (Car Pooling) முறையை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் எரிபொருள் விரயத்தைத் தவிர்க்கத் தனியார் நிறுவனங்கள் மீண்டும் 'வீட்டிலிருந்தே வேலை' (Work From Home) முறையைச் செயல்படுத்த முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். சூரியசக்தி மற்றும் மின்சார வாகனப் பயன்பாட்டை மக்கள் ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள இந்த இக்கட்டான நேரத்தில், ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்குப் பங்களிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார். விவசாயத் துறையில் டீசல் பம்புகளுக்குப் பதிலாகச் சூரியசக்தி பம்புகளைப் பயன்படுத்துமாறும் அவர் விவசாயிகளை ஊக்குவித்தார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தேவையற்ற எரிபொருள் பயன்பாட்டைத் தவிர்ப்பது தேசபக்திக்குச் சமமானது என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.