தி ஆயோக் கூட்டத்தில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை!
இந்தியத் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஜூன் 11-ம் தேதி மிக முக்கியத்துவம் வாய்ந்த நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த உயர்மட்டக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய், மாநிலத்தின் உரிமைகள் மற்றும் வளர்ச்சி சார்ந்த பல்வேறு அதிரடியான கோரிக்கைகளைப் பிரதமரிடம் நேருக்கு நேர் முன்வைத்துள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, உலகப் பொதுமறையான 'திருக்குறளை' இந்தியாவின் தேசிய நூலாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோரிக்கையை முதலமைச்சர் விஜய் இக்கூட்டத்தில் பலமாக வலியுறுத்தியுள்ளார். இதுமட்டுமின்றி, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் நீட் (NEET) நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக +2 பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் உள்ள ‘மும்மொழிக் கொள்கையை’ எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் பிரதமரிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் கல்வி மற்றும் கலாச்சார உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் எடுத்துள்ள இந்த அதிரடி நிலைப்பாடு, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.