இந்த 5 கட்டளைகளை பின்பற்றுங்க... அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்குப் பிரதமர் மோடி  வேண்டுகோள்!

 

இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாகத் தோன்றும் பனி லிங்கத்தைத் தரிசிப்பதற்கான புனித யாத்திரை ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான யாத்திரையை ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா முறைப்படி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் அமர்நாத் செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிறப்பு வாழ்த்துத் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அமர்நாத் யாத்திரை என்பது வெறும் ஆன்மிகப் பயணம் மட்டுமல்ல, அது இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை உணர்த்தும் ஒரு உன்னத வடிவம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும் யாத்திரை பாதைகளின் தூய்மையைப் பேணி இயற்கை அழகைப் பாதுகாக்க வேண்டும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் மற்றும் காஷ்மீர் மக்களின் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்க வேண்டும் என்ற 3 கட்டளைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் சேர்த்துப் புனிதப் பயணம் முடிந்து வீடு திரும்பியதும் தங்களின் அன்புக்குரியவர்களின் பெயரில் தலா 1 மரக்கன்றை நட வேண்டும் என்றும், ஒட்டுமொத்த யாத்திரையின் போதும் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும் என்றும் மீதமுள்ள 2 கட்டளைகளை விவரித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களை இன்முகத்துடன் வரவேற்கும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் பிரதமர் மோடி தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.