அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது... புத்தக முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை!

 

கோயம்புத்தூரில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு புகாரைத் தொடர்ந்து, அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 7 தளங்களைக் கொண்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகம் கடந்த அக்டோபர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த நூலகத்திற்குப் புத்தகங்களை வாங்கியதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாகப் பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரை ஒன்றில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தரப்பினர் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் முறையான புகார்கள் அளிக்கப்பட்டன. இதற்கிடையே, சர்ச்சைக்குரிய நூல்கள் நூலகத்திலிருந்து அகற்றப்பட்டதோடு, லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேரில் சோதனை நடத்தி ஆவணங்களைச் சரிபார்த்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தப் புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் முடிவில் அவரிடமிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பதிப்பக உரிமையாளர் மோகன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் பதிப்பக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பதிப்பக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.