அம்மாடியோவ்... ரூ.7,086 கோடி மினிமம் பேலன்ஸ் அபராதமாக வசூலித்த வங்கிகள்!
வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து, கடந்த 2025-26 நிதி ஆண்டில் மட்டும் இந்திய வங்கிகள் ரூ. 7,086.63 கோடியை அபராதமாக வசூலித்துள்ளன. மாநிலங்களவையில் எம்பி எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ அறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன:
19 தனியார் வங்கிகள் மட்டும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.4,948.71 கோடி அபராதம் வசூலித்துள்ளன. 12 அரசுப் பொதுத்துறை வங்கிகள் இணைந்து ரூ.2,137.92 கோடியை அபராதமாக வசூல் செய்துள்ளன. வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக அளவிலான தொகையை அபராதமாகப் பிடித்தம் செய்த வங்கிகளின் விவரம் வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கி மட்டும் தனியாக ரூ. 1,798.14 கோடியை வசூலித்துள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ஆக்சிஸ் வங்கி ரூ. 1,081.33 கோடியை அபராதமாகப் பிடித்துள்ளது. (இந்த இரு தனியார் வங்கிகள் மட்டுமே சேர்ந்து தனியார் வங்கிகளின் மொத்த வசூலில் 58% தொகையைப் பெற்றுள்ளன). மூன்றாவதாக உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ரூ. 353.50 கோடியை வசூலித்துள்ளது.
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, சேமிப்புக் கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் அபராதத்தை முழுமையாக ரத்து செய்துவிட்ட நிலையிலும், நடப்புக் கணக்குகளில் இருந்து ரூ. 477.27 கோடியைப் பிடித்துள்ளது. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா மற்றும் அடிப்படைச் சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகளுக்கு எவ்வித அபராதமும் விதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் உள்ள சுமார் 73 கோடி பூஜ்ஜிய இருப்பு பதிவுக் கணக்குகளுக்கு இந்த விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிச் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை குறையும் போது, வங்கிகள் உடனடியாக அபராதம் விதிக்கக் கூடாது என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்குச் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் முதலில் எச்சரிக்கை விடுத்து, இருப்புத் தொகையை மீண்டும் கூட்டுவதற்கு போதிய கால அவகாசம் வழங்கிய பின்னரே அபராதம் விதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.