20 கோடி ரூபாய் பணமோசடி வழக்கு... த.வெ.க. நிர்வாகி கைது ... புதுக்கோட்டையில் பரபரப்பு!

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, சுமார் 100 பேரிடம் 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மோசடி செய்ததாகத் தமிழக வெற்றிக்கழகத்தின் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன் மீது புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் திரண்டு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்தத் தகவல் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்கத் தலைமறைவான சரவணன், வடமாநிலத்தில் பதுங்கி இருப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், பதுங்கியிருந்த சரவணனைத் துரிதமாகக் கைது செய்து புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தனர். மக்களிடம் கோடி கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்த அரசியல் நிர்வாகி சிக்கியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரவணன் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தங்களது பணத்தைத் திரும்பப் பெற்றுத் தரக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். தற்போது கைது செய்யப்பட்ட சரவணனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.