பணமோசடி சர்ச்சை... நேபாள உள்துறை அமைச்சர் சுதான் குருங் ராஜினாமா! “பதவியை விட அறமே முக்கியம்” - பேஸ்புக்கில் உருக்கம்!
பதவியேற்ற ஒரு மாத காலத்திற்குள்ளேயே, நிதி முறைகேடு புகார்களால் நேபாள உள்துறை அமைச்சர் சுதான் குருங் தனது பதவியைத் துறந்துள்ளார். ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்து அதிகாரத்திற்கு வந்தவர், அதே போன்ற ஒரு புகாரில் பதவி விலகியிருப்பது நேபாள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாகப் பணமோசடி வழக்குகளுக்காக விசாரிக்கப்பட்டு வரும் நேபாளத்தின் பிரபல தொழிலதிபர் தீபக் பட்டா என்பவருடன், சுதான் குருங்கிற்கு நெருங்கிய வணிகத் தொடர்புகள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. குறிப்பாக ஸ்டார் மைக்ரோ இன்சூரன்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களில் தீபக் பட்டாவுடன் இணைந்து சுதான் குருங் முதலீடு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
சுதான் குருங் நடத்தி வந்த 'ஹாமி நேபாளம்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்குத் தீபக் பட்டாவிடமிருந்து நிதி வந்ததாகவும் புகார்கள் எழுந்தன. தனது ராஜினாமா குறித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "எனது முதலீடுகள் மற்றும் பங்குகள் குறித்துப் பொதுமக்கள் எழுப்பியுள்ள கேள்விகளை நான் தீவிரமாக எடுத்துக் கொள்கிறேன். எனக்குப் பதவியை விட அறமே பெரியது. என் மீதான புகார்கள் குறித்து நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவும், அதிகாரத்தில் இருந்தால் அந்த விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் நான் விலகுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு 'Gen Z' இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் மூலம் பிரபலமானவர் சுதான் குருங். 38 வயதான இவர், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதாகக் கூறி 'ராஷ்டிரிய ஸ்வதந்த்ரா கட்சி' சார்பில் கடந்த மார்ச் மாதம் அமைச்சராகப் பொறுப்பேற்றார். 46 இளைஞர்களின் உயிர்த் தியாகத்தால் உருவான அரசாங்கம் இது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தார்மீகப் பொறுப்பேற்று விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.