கடைசி நாளிலும் பணமழை... திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி பறிமுதல் - வேட்பாளர் வீட்டிலும் ரெய்டு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில், திமுக நிர்வாகி ஒருவரின் காரில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.2.44 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் பகுதியில் வட்டாட்சியர் பழனிசெல்வன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெரம்பலூரில் இருந்து வந்த காரை நிறுத்திச் சோதனையிட்டபோது, அதில் 5 அட்டைப் பெட்டிகளில் ரூ.2 கோடியே 44 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன் மற்றும் ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தையும் காரையும் பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
குன்னம் மட்டுமின்றி தமிழகத்தின் பல இடங்களிலும் நேற்று அதிரடி சோதனைகள் நடைபெற்றன. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.48.03 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு கைப்பற்றினர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே திமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.44 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேர்தலுக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினரின் இந்த அதிரடி வேட்டை அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் ₹1,200 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.