பணம் போச்சே...ரூ 12,00,000/- த்தை நார், நாராக கடித்து குதறிய எலிகள்... பெண் கதறல்!
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், தனது குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்காகவும் நகை வாங்குவதற்காகவும் பல வருடங்களாகப் பணத்தைச் சேமித்து வந்துள்ளார். அவருக்குத் தங்க நகைகள் அணிவது மிகவும் பிடிப்பதனால், சேமித்து வைத்திருந்த முழுப் பணத்தையும் வீட்டில் இருந்த பழைய இரும்புப் பெட்டி ஒன்றில் பாதுகாப்பாக வைத்துள்ளார்.
சமீபத்தில் நகை வாங்குவதற்காக அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அவர் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் எலிகளால் கடிக்கப்பட்டு நார் நாராகக் கிழிக்கப்பட்டுக் கிடந்தன. பெட்டியின் ஓட்டை வழியாக உள்ளே புகுந்த எலிகள், சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகளைத் துண்டு துண்டாக நாசமாக்கியது தெரியவந்தது.
தங்களது வாழ்நாள் சேமிப்பு மொத்தமும் இந்த விவகாரத்தால் பாழானதைக் கண்டு அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு அழுது புலம்பினர். இதற்கிடையே, கிழிக்கப்பட்ட நோட்டுகளை மாற்ற முடியுமா என்பது குறித்து அவர்கள் தற்போது வங்கி அதிகாரிகளை அணுகி ஆலோசனை கேட்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்களது பணத்தை வீடுகளில் பாதுகாப்பாக வைப்பதைத் தவிர்த்து, வங்கி கணக்குகளில் சேமிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்