குரங்கு கடித்துக் குதறியதில் 3 வயது குழந்தை உட்பட 8 பேர் படுகாயம்!
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவில் உள்ள பொதுக் குழாயில் நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் வழக்கம்போல் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த மர்ம குரங்கு ஒன்று அங்கிருந்த பெண்களை நோக்கிப் பாய்ந்து திடீரெனச் சரமாரியாகக் கடித்துக் குதறத் தொடங்கியது. இதனால் பயந்துபோன பெண்கள் தங்களின் குடங்களை அங்கேயே போட்டுவிட்டு அலறியடித்தபடி நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.
அதே சமயத்தில் அந்தத் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்திற்குத் தாய் ஒருவர் தனது 3 வயது ஆண் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். வெறிகொண்ட அந்தக் குரங்கு அந்தத் தாயின் கையில் இருந்த 3 வயதுக் குழந்தையையும் கொடூரமாகக் கடித்துக் குதறியது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தடியுடன் குரங்கை விரட்ட முயன்றபோது, அது தன்னை விரட்டியவர்களையும் விடாமல் துரத்தித் துரத்திக் கடித்ததில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிரமாகப் பாதிக்கப்பட்ட 3 வயதுக் குழந்தை மேல் சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்பில் உள்ளது. இதற்கிடையே பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் வனத்துறை அதிகாரிகள், சுமார் 2 மணி நேரம் போராடிக் கூண்டு வைத்து அந்தக் குரங்கைப் பத்திரமாகப் பிடித்தனர். பிடிபட்ட அந்த வெறிகொண்ட குரங்கு வண்டலூர் உயிரியல் பூங்காவில் பாதுகாப்பாகக் கொண்டு போய் விடப்பட்டதை அடுத்து நந்திவரம் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.