குரங்குகளைத் துன்புறுத்திய விவகாரம் ... 2 பேருக்கு ரூ25000/- அபராதம்!
பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவ மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கல்லூரி நிர்வாகம் வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி குரங்குகளைப் பிடிப்பதற்காக 2 பேர் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலமாகப் பிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அவர்கள் குரங்குகளை மிகவும் கொடூரமாகத் துன்புறுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் கண்ட பெரம்பலூர் வனத்துறையினர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கல்லூரி முதல்வர் மற்றும் சம்மந்தப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விலங்குகளைத் துன்புறுத்தும் இதுபோன்ற செயல்கள் சட்டப்படி குற்றமாகும் என்பதால் வனத்துறையினர் உடனடியாகத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் அடிப்படையில் குரங்கு பிடிப்பாளர்களான ஜீவா மற்றும் சின்னத்துரை ஆகிய இருவருக்கும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். விலங்குகளுக்கு எதிரான இது போன்ற கொடுமையான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வைரலான இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.