பருவமழை தீவிரம்.. கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு!

 

கர்நாடக மாநிலத்தின் காவிரி மற்றும் கிருஷ்ணா நதிப் படுகைகளின் பிறப்பிடங்களான மலை மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை  வேகம் எடுத்துள்ளது. இதனால் அங்குள்ள முக்கியப் பிரதான அணைகளுக்குத் தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களாகக் கர்நாடகாவின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் பருவமழை மிகத் தீவிரமடைந்துள்ளது.  காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்து சில இடங்களில் தற்காலிக மின்தடைகளும் ஏற்பட்டுள்ளன.

சிவமொக்கா மாவட்டம் ஹோசநகர் தாலுகா மற்றும் அதன் சுற்றுவட்டாரக் காபித் தோட்டப் பகுதிகளில் பரவலாகத் தொடர் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மலைப் பகுதிகளில் பெய்து வரும் இந்தத் தொடர் மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளான பத்ரா, துங்கா மற்றும் லிங்கனமக்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்துத் தற்பொழுது பெருமளவு அதிகரித்துள்ளது.

மழையின் காரணமாக, ஒட்டுமொத்தமாக 185 அடி கொள்ளளவு கொண்ட புகழ்பெற்ற பத்ரா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்பொழுது 142.8 அடியாக உயர்ந்துள்ளது. இதே வேகம் நீடித்தால் இன்னும் சில வாரங்களில் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகத் துங்கா மற்றும் பத்ரா நதிக்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்குக் கர்நாடக வருவாய்த்துறை சார்பில் முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணைகளின் மதகுகள் மற்றும் நீர் வெளியேறும் பகுதிகளைப் பார்வையிடப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் திரள வாய்ப்புள்ளதால், அசம்பாவிதங்கள் ஏதும் நேராமல் தடுக்க அந்தந்த மாவட்டப் பாதுகாப்புப் பிரிவு போலீசார் மற்றும் நீர்வளத்துறைப் பாதுகாப்புப் படையினர் அணைப் பகுதிகளில் தடுப்பு வேலிகளை அமைத்துத் தீவிரப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நதிக்கரையோரப் பகுதிகளில் அவசரக் கால மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.