மாதந்தோறும் ரூ.4,000 உதவித்தொகை... உடனே இதைப் பண்ணுங்க - தவெக அரசு அறிவுறுத்தல்!
தமிழகத்தில் தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 4,000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கும் "இளைஞர் நல உதவித்தொகை திட்டத்தை" விரைவில் அமல்படுத்தத் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டையை உடனடியாகப் புதுப்பித்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தவெக தலைவர் விஜய் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையைப் போக்கும் விதமாகப் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளைத் தனது 40 அம்சக் கொள்கை அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.
உயர்கல்வி முடித்தும் வேலை கிடைக்காமல் இருக்கும் 29 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 4,000 மற்றும் டிப்ளமோ, ஐ.டி.ஐ, பிளஸ் 2 முடித்த தகுதியான இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,500 உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணிகளில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
விரைவில் கூடவுள்ள தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, முதலமைச்சர் விஜய் இந்த மாபெரும் நிதியுதவித் திட்டத்தை முறைப்படி சட்டப்பேரவையில் அறிவிப்பார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான நபர்களுக்கு மட்டுமே நிதிச் சுமை இன்றி நேரடியாக வங்கி கணக்கில் பணம் சென்றடைவதை உறுதி செய்ய அரசு சில முக்கிய நிபந்தனைகளை முன்னிறுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நினைக்கும் வேலையில்லா இளைஞர்கள் அனைவரும் தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (tnvelaivaaippu.gov.in) தங்களது கல்வித் தகுதியை முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும்.
ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும், தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டை புதுப்பிக்கப்படாமல் இருந்தால், அவர்கள் ஆன்லைன் மூலம் அதனைப் புதுப்பித்து "லைவ்" பதிவில் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முறையான அரசாணை மற்றும் விண்ணப்பப் பதிவுக்கான பிரத்யேக இணையப்பக்கம் பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பின் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.