1 லட்சம் போலீசார் குவிப்பு.. வாக்கு எண்ணும் மையங்களில் உச்சக்கட்ட கண்காணிப்பு... சென்னையில்  மட்டும் 22,000 போலீசார் பாதுகாப்பு!

 

இன்று 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மட்டும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் முழு நேரமும் ஆயுதம் ஏந்திய காவல் படையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வாக்கு எண்ணும் மையங்களில் மாபெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் ஆணையாளர்கள் மேற்பார்வையிலும் துணை ஆணையாளர்கள் தலைமையிலும் இந்த 3 மையங்களிலும் 4 அடுக்கு பாதுகாப்பு தீவிரமாக போடப்பட்டிருந்தது.

சுழற்சி முறையில் 24 மணி நேரமும் எந்தவொரு சிறு அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் காவல் துறையினர் விழிப்புடன் செயலாற்றி வருகின்றனர். பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல் துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து தங்களது நேரடி ஆய்வுகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.

இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் 3 மையங்கள் மட்டுமின்றி சென்னை மாநகர் முழுவதும் காவல் துறையினர் தங்களது பலத்த கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்காக சிறப்பு காவல் படை மற்றும் ஆயுதப்படையினர் உட்பட சுமார் 22,000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியாகும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க இந்த மாபெரும் பாதுகாப்பு நடவடிக்கை முழு வீச்சில் எடுக்கப்பட்டுள்ளது.