மதுரை மங்களாம்பட்டியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி படையல் திருவிழா - 100க்கும் மேற்பட்ட சேவல்கள் பலி!

 

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டி கிராமத்தில், மழை வேண்டி ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரம்பரியமிக்க "ஆடி படையல் திருவிழா" நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றுச் சமைத்து உண்ணும் வினோத நைவேத்திய முறை காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

மங்களாம்பட்டி கிராம மக்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தும் வகையில் மதுரைவீரன் சுவாமிக்குச் சிறப்பான முறையில் வழிபாடுகளை நடத்தினர். மழை பொழியவும், பயிர்கள் செழிக்கவும் வேண்டி 100-க்கும் மேற்பட்ட சேவல்கள் சாமிக்கு பலியிடப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. சாமி தரிசனத்தின் போது கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் திரளாகக் கலந்து கொண்டு மதுரைவீரனை வழிபட்டனர்.

பூஜை நிறைவடைந்ததும், பலியிடப்பட்ட சேவல்களைக் கொண்டு பெரிய அளவிலான பாத்திரங்களில் அசைவ உணவு தயார் செய்யப்பட்டது. சேவல் கறியுடன் மொச்சைப்பயறு கலந்து சுவையான கறி உணவு சமைக்கப்பட்டது. இந்தச் சமையல் பணிகள் முழுவதையும் அந்த ஊர் ஆண்கள் மட்டுமே முன்னின்று செய்தனர். பெண்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிய நிலையில், பெண்களுக்கு இந்த அன்னதானத்தில் பங்கேற்கவோ அல்லது உணவை உண்ணவோ அனுமதி வழங்கப்படுவதில்லை. வாழை இலை போட்டுச் சுடச்சுடச் சமைக்கப்பட்ட அசைவ உணவு ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு மட்டுமே பரிமாறப்பட்டது.

இவ்வாறு பாரம்பரிய முறையில் ஆடி படையல் விழா நடத்தி வழிபட்ட பிறகு, அப்பகுதியில் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் தலைமுறை நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதன்படி, நேற்று விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அப்பகுதியில் திடீரெனச் சாரல் மழை பெய்ததால், சுவாமி தங்களது வழிபாட்டை ஏற்றுக் கொண்டதாகக் கூறி கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.