சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000க்கும் மேற்பட்டோர் பலி - ஐ.நா. கவலை!
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அந்நாட்டு அரசு ராணுவத்திற்கும், 'விரைவு ஆதரவுப் படை' என்ற துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரு தரப்பினரும் நவீன ரக ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள் அங்கு பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உள்ளூர் மருத்துவக் குழுக்கள் வெளியிட்டுள்ள நடப்புத் தரவுகளின்படி, சூடானின் தலைநகர் கார்ட்டூம் மற்றும் டார்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட அடுக்கடுக்கான டிரோன் தாக்குதல்களில், இந்த 2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குடியிருப்புப் பகுதிகள், சந்தைகள் மற்றும் தற்காலிக மருத்துவ முகாம்கள் மீது இருதரப்புப் படைகளும் ஏவுகணைகள் தாங்கிய ஆளில்லா விமானங்களை ஏவித் தாக்குதல் நடத்துவதால், அப்பாவி மக்கள் தங்களது வாழ்விடங்களை இழந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாகத் தப்பியோடி வருகின்றனர்.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் பிரிவின் உயர் ஆணையர் வோல்கர் டர்க் தனது உரையில், "சூடான் நாட்டில் டிரோன் போன்ற நவீன வான்வழித் தாக்குதல் ஆயுதங்களின் பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால், அங்கு ஏற்கனவே நீடித்து வரும் கொடூரமான உள்நாட்டு மோதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் மேலும் தீவிரமடைந்து பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இது சர்வதேசச் சமூகத்திற்குப் பெரும் கவலையளிக்கும் விஷயமாகும்," என்று அதிர்ச்சித் தகவலைப் பதிவு செய்துள்ளார்.
டிரோன் தாக்குதல்கள் காரணமாகச் சூடானில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் முற்றிலுமாகச் செயலிழந்துள்ளதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இருதரப்புப் படைகளுக்கும் வெளிநாடுகளில் இருந்து நவீன ஆயுதங்கள் மற்றும் டிரோன்கள் விநியோகம் செய்யப்படுவதைச் சர்வதேச நாடுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், போர்க்கால அடிப்படையில் அங்குள்ள பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தேவையான தூதரக அழுத்தங்களை உலக நாடுகள் கொடுக்க வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.